Home / Jamiya / புதிய மாணவர் அனுமதி 2020

புதிய மாணவர் அனுமதி 2020

தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம் – ஓர் அறிமுகம்

கலாபீடத்தின் தோற்றமும் நோக்கமும்

மனித வாழ்வின் குறிக்கோளாகிய இறைநெறியைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டியது ஒவ்வொரு மனிதன் மீதும் சுமத்தப்பட்டுள்ள பொறுப்பாகும். இப்பொறுப்பைச் செவ்வனே நிறைவேற்ற இறைநெறியாகிய இஸ்லாத்தை அதற்கே உரிய முறையில் அறிந்துகொள்வது இன்றியமையாததாகும்.

இறைநெறியின் அடிப்படை மூலாதாரங்களான அல்குர்ஆன், சுன்னாவை மிகச் சரியாகவும் ஆழமாகவும் கற்றுத் தேறிய அறிஞர்கள் போதிய அளவில் இருக்கும் பட்சத்தில்தான் சமூகம் உயிர்த் துடிப்புள்ளதாகவும் முன்னேற்றமுள்ளதாகவும் மிளிரும். எமது சமூகத்தைப் பீடித்துள்ள மந்த நிலை, பிற்போக்கு நிலை, அறியாமை, இழிவு போன்ற இத்தியாதி பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம், இனிய இஸ்லாத்தின் நிழலில் சமூகத்தைச் செழுமையான வாழ்வின்பால் அழைத்துச் செல்லும் சிந்தனை வளம் மிக்க சீரிய இஸ்லாமிய அறிஞர்கள் போதிய அளவில் எம்மிடம் காணப்படாமையாகும்.

எனவே, சமூகத்தின் அவசர,  அவசியத் தேவையாகிய இஸ்லாமியக் கலாஞானங்களைக் காலத்தின் அறைகூவலுக்கு ஏற்பக் கற்றுத் தேர்ந்த ‘இஸ்லாமிய அறிஞர் குழு’ ஒன்றைத் தோற்றுவிக்கும் நன்னோக்குடன் 1980ம் ஆண்டு தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம் உருவாக்கப்பட்டது.

கலாபீடத்தின் பயிற்சி நெறி

  1. ஷரீஆ பிரிவு

கலாபீடத்தின் கல்வித் திட்டம் ஏழு ஆண்டு காலப் பயிற்சி நெறியாகும். அல்குர்ஆன், தப்ஸீர், ஹதீஸ், அகீதா, பிக்ஹ், இஸ்லாமிய வரலாறு, அக்லாக் போன்ற இஸ்லாத்தோடு தொடர்பான மனித வாழ்க்கைக்கு அவசியமான கலைகளும், தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகியவற்றோடு முக்கியமாக அரபு மொழியும் ஆழமாகக் கற்பிக்கப்படும்.

பயிற்சி நெறியின் நான்காம் வருட இறுதியில் தமிழ் மொழி மூலம் க.பொ.த. (சா.த.) பரீட்சைக்கும், ஏழாம் வருடத்தில் க.பொ.த. (உ.த.) பரீட்சையில் கலைப் பிரிவுக்குரிய மூன்று பாடங்களில் மாத்திரம் தோற்றுவதற்குப் பயிற்றுவிக்கப்படுவர். ஏழாம் வருட முடிவில் கலாபீட இறுதிப் பரீட்சைக்குத் தோற்றிச் சித்தியடைபவர்களுக்கு ‘மௌலவி ஆலிம்” என்ற பட்டம் வழங்கப்படும். அத்தோடு இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் ‘அல் ஆலிம்’ மற்றும் பொதுத் தகவல் தொழில் நுட்ப (GIT) பரீட்சைகளுக்குத் தோற்றுவதற்கான வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

  1. ஹிப்ழ் பிரிவு

ஹிப்ழ் பிரிவு கலாபீடத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். இப்பிரிவுக்கு சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்கள் 3 வருடங்களில் அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்ய வேண்டும். அத்தோடு அரச பாடசாலை பாடங்களான தமிழ், சிங்களம், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், வரலாறு போன்ற பாடங்கள் கற்பிக்கப்படும். தவணைப் பரீட்சைகள், வகுப்பேற்றப் பரீட்சை போன்றவற்றில் மாணவர்கள் சித்தியடைவது கட்டாயமாகும். ஹிப்ழ் முடிக்கும் மாணவர்கள் ஷரீஆப் பிரிவின் முதலாம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்படுவர். 3 வருடத்தினுள் ஹிப்ழ் முடிக்கத் தவறும் மாணவர்கள் தொடர்ந்து ஹிப்ழ் பிரிவில் இருக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.

கலாபீடத்தின் எல்லா மாணவர்களுக்கும் நூலக, உணவு, விடுதி, விளையாட்டு வசதிகள் வழங்கப்படும். ஒவ்வொரு மாணவனிடமிருந்தும் மாதாந்தம் ரூபா 7500/= அறவிடப்படும். (நிதி நிலைமைகளைப் பொறுத்து இத்தொகையில் மாற்றம் ஏற்பட இடமுண்டு). வெளிவாரிப் பரீட்சைகளுக்கான எவ்விதச் செலவுகளையும் கலாபீடம் பொறுப்பேற்கமாட்டாது.

எல்லா மாணவர்களும் தமது முழுத் திறமைகளையும் பயன்படுத்தித் தம்மை அறிவும் ஆற்றலும் மிக்கவர்களாக மாற்றிக்கொள்ளவும், எழுத்தாற்றல், பேச்சாற்றல்களை வளர்த்துக்கொள்ளவும் போதிய பயிற்சிகள் வழங்கப்படும்.

கலாபீடத்தின் சட்டதிட்டங்களைப் பூரணமாகப் பின்பற்றி, ஒழுக்க நடவடிக்கைகளில் மிகவும் நல்ல முறையில் நடந்து, பயிற்சிநெறியில் போதிய கவனம் எடுத்துப் படிப்பை மேற்கொள்பவர்கள் மாத்திரமே பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்கப்படுவார்கள்; வகுப்பேற்றப்படுவார்கள். ஒரே வகுப்பில் இரண்டு முறை தொடர்ந்து சித்தியடையத் தவறும் மாணவர்கள் கலாபீடத்தில் கல்வி பயிலத் தகுதியற்றவர்களாகக் கணிக்கப்பட்டு கலாபீடத்திலிருந்து நீக்கப்படுவர்.

கலாபீட அனுமதிக்கான தகைமைகள்

  1. ஷரீஆப் பிரிவு

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய ஏதாவது மொழியில் 2020ம் ஆண்டு எட்டாம் வகுப்பில் கல்வியைத் தொடரத் தகுதிபெற்ற, அல்குர்ஆனைத் திருத்தமாக ஓதத் தெரிந்த, நல்லொழுக்கமுள்ள, திறமையான, 13 வயதுக்குட்பட்ட முஸ்லிம் மாணவர்கள் கலாபீடத்தில் நுழைவு பெறத் தகுதியுடையோராவர்.

  1. ஹிப்ழ் பிரிவு:

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய ஏதாவது மொழியில் 2020ம் ஆண்டு ஆறாம்; வகுப்பில் கல்வியைத் தொடரத் தகுதிபெற்ற, ஆல்குர்ஆனைத் திருத்தமாக ஓதத் தெரிந்த, நல்லொழுக்கமுள்ள, திறமையான, 11 வயதுக்குட்பட்ட முஸ்லிம் மாணவர்கள் கலாபீடத்தின் ஹிப்ழ் பிரிவிற்கு நுழைவு பெறத் தகுதியுடையோராவர்.

இத்தகுதிகளைப் பூரணமாகப் பெற்றிருக்கும் மாணவர்கள் மாத்திரம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் பத்திரத்தோடு சுய விலாசமிடப்பட்டு, பதிவுத் தபாலுக்கான முத்திரையும் ஒட்டப்பட்ட 9” X 4” அளவிலான தபாலுறை ஒன்றையும் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். விண்ணப்ப முடிவுத் திகதி 30.11.2019 ஆகும்.

தகுதிகாண் நேர்முகப் பரீட்சை:

  1. ஷரீஆப் பிரிவு

தகுதி பெற்ற மாணவர்கள் கலாபீடத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு இஸ்லாமிய அறிவு, பொது உளச்சார்பு, பொது அறிவு, மொழி (தமிழ், ஆங்கிலம், சிங்களம்), கணிதம் முதலான துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்களை உள்ளடக்கிய (ஒரு மணி நேர) எழுத்துப் பரீட்சை ஒன்றிற்கும், நேர்முகப் பரீட்சை ஒன்றிற்கும் தோற்ற வேண்டும்.

  1. ஹிப்ழ் பிரிவு

தகுதி பெற்ற மாணவர்கள் கலாபீடத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு நேர்முகப் பாPட்சை ஒன்றிற்கு தோற்ற வேண்டும். நேர்முகப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெறும் மாணவர்கள் மாத்திரமே கலாபீடத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவர்.

 

Dharuth Thowheed Assalafiyya Institute

Paragahadeniya- 60071

 

விண்ணப்பப் படிவத்தைத் தரவிறக்கம் செய்ய