Home / அறிமுகம்

அறிமுகம்

இஸ்லாத்தை தூய வடிவில் போதிப்பதே எமது நோக்கம்!

ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளர் ஏ.எல். கலீலுர் ரஹ்மான் அவர்கள் நவமணிக்கு வழங்கிய செவ்வி. (நேர்காணல்: சிறாஜ் எம். ஸாஜஹான்)

1) உங்களது அமைப்பு பற்றி

இஸ்லாமிய வாழ்க்கை நெறியின் ஊற்றுக்கண்களாக அல்குர்ஆனும் அஸ்ஸுன்னாவும் திகழ்கின்றன. இவ்விரு அடிப்படையில் ‘நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும் பணி’யில் தனி நபர்களாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த சகோதரர்களை ஜமாஅத் – அமைப்பின் மூலம் அணிதிரட்டப்பட்டு உயர்ந்த இலட்சியத்தை நோக்கி வழிநடாத்துவதற்காக 1947 நவம்பர் 11ம் திகதி

‘ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா’ என்ற இவ்வமைப்பு அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் அல்பக்ரி (றஹ்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது.

இதன் தற்போதைய தலைவராக – அமீராக – அஷ்ஷெய்க் முஹம்மது அபூபக்கர் சித்தீக் மதனி அவர்கள் பணியாற்றுகின்றார்கள்.

 

இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட மிகப் பழமை வாய்ந்த ஓர் அமைப்பாக இது திகழ்கின்றது – அல்ஹம்து லில்லாஹ்!

2) அமைப்பின் நோக்கங்கள், செயற்பாடுகள்

அமைப்பின் நோக்கங்கள், செயற்பாடுகள் விரிவுபட்டவை. ஓர் இஸ்லாமிய அமைப்பு எத்தகைய நோக்கங்களையும் செயற்பாடுகளையும் முன்னிலைப்படுத்திச் செயல்பட வேண்டுமோ அத்தகைய எல்லாச் செயல்பாடுகளையும் ஒருங்கே அமைத்தே முடியுமானவரை செயல்பட்டு வருகின்றோம். இருந்தும் பின்வரும் நோக்கங்களையும் செயல்பாடுகளையும் குறித்துக் காட்ட முடியும்.

புனித அல்குர்ஆனினதும் அஸ்ஸுன்னாவினதும் அடிப்படையில் இஸ்லாமிய மார்க்கத்தைக் கற்பித்தல், இஸ்லாமிய கோட்பாடுகளுக்கிணங்க வாழவும் தங்களை நடத்திச் செல்லவும் முஸ்லிம் மக்களைப் பயிற்றுவித்தலும் அவர்களுக்கு வழிகாட்டலும், இஸ்லாமிய போதனைகளைப் பரப்புவதற்கும் மார்க்கப் பணிகளில் ஈடுபடுவதற்கும் முஸ்லிம் மக்களுக்கு வேண்டிய அறிவையும் ஆற்றலையும் பெற்றுக் கொடுத்தல், அரபு மொழியைப் பயில்வதற்கு ஊக்கமளித்தலும், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அரபுக் கல்லூரிகளைத் தாபித்தல், இது தொடர்பில் மாணவர்களுக்கு எல்லா உதவிகளையும் வழங்குதல், நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கிளை ஒழுங்கமைப்புக்களைப் தாபித்தலும் பேணுதலும் நிருவகித்தலும் அபிவிருத்தி செய்தலும், இஸ்லாமிய நூல்கள், சஞ்சிகைகள், மஞ்சரிகள், பருவ வெளியீடுகள், துண்டுப் பிரசுரங்கள், செய்தித்தாள்கள், ஒலி, ஒளி நாடாக்கள், பல்லின ஊடகச் சாதனங்கள் என்பவற்றை அச்சிடுதலும் வெளியிடுதலும் விநியோகித்தலும்.

நாடு முழுவதிலும் பொதுமக்களின் பாவனைக்கென பள்ளிவாசல்களையும் இஸ்லாமிய நிலையங்களையும் இஸ்லாமிய நூலகங்களையும் நிர்மாணிப்பதற்கும் பழுதுபார்ப்பதற்கும்; புனர்நிர்மாணம் செய்வதற்கும் உதவியளித்தல்.

இஸ்லாமிய அறிவை மேம்படுத்துவதற்கும் இஸ்லாமிய கோட்பாடுகளில் செயல்படுகின்ற வாழ்வு முறையை ஊக்குவிப்பதற்கு வகுப்புக்கள், கூட்டங்கள், கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், அமர்வுகள் என்பவற்றை ஒழுங்குசெய்தலும் நடத்தலும்.

இலங்கை முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி, சமூக, பொருளாதார நலனுக்குத் தேவையான உதவிகளையும் வசதிகளையும் வழங்குதல்.

இலங்கையிலுள்ள பல்வேறு மதக்குழுக்களுக்கும் சமூகங்களுக்கும் மத்தியில் சமூக நல்லிணக்கம் ஏற்படுவதற்கான உதவியும் வசதிகளும் வழங்குதல்.

இலங்கையிலும், இலங்கைக்கு வெளியேயும் இவற்றையொத்த முயற்சிகளில் வேறு இஸ்லாமிய நிலையங்களுடன் நட்பியல் உதவிகளைத் தாபித்தல், பேணுதல், உதவிகளைச் செய்தல்

3) பிரச்சார (தஃவா) நடவடிக்கைகள் பற்றி

இஸ்லாமிய மார்க்கத்தின் செய்திகளை மக்களுக்குக் கொண்டுசெல்லும் பணியை எமது ஜமாஅத் செய்து வருகின்றது. மௌட்டீகம், அறியாமை, சடங்குகள் போன்ற இருள்களுக்குள் சிக்கி நிம்மதியைத் தொலைத்து அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு கொள்கைத் தெளிவை ஊட்டி இறைநெருக்கத்தோடு வாழ்வதற்கான அழகிய வழிகாட்டல்களை அல்குர்ஆன் அஸ்ஸுன்னா ஒளியில் நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

முஸ்லிம்கள் பிற சமூகங்களின் உணர்வுகளை மதித்து சமூக நல்லிணக்கத்தோடு கூடிய சகவாழ்வு வாழ வேண்டுமென்பதும் எமது பிரச்சார நடவடிக்கைகளின் பின்னாலுள்ள எதிர்பார்ப்புக்களில் ஒன்றாகும்.

எமது பிரச்சார நடவடிக்கைகள் பின்வரும் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றன.

  • பேச்சு மூலமான பிரச்சார நடவடிக்கை:

இஸ்லாத்தை துறைபோகவும், ஆழமாகவும் கற்ற கொள்கைத் தெளிவுள்ள, ஒழுக்க விழுமியங்களை தன்னகத்தே கொண்ட முன்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து பிரச்சாரப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை இத்துறையில் ஈடுபடுத்துகிறோம்.

குத்பாப் பேருரைகள், சொற்பொழிவுகள், மாநாடுகள், கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், கேள்வி-பதில் நிகழ்ச்சிகள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள், தர்பியா நிகழ்ச்சிகள் என்பன இதில் அடங்கும்.

இத்தகைய நிகழ்ச்சிகள் CDக்களில், இணையத்தளங்களில், வானொலி, தொலைக் காட்சிகளில் ஒலி, ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

  •  எழுத்து மூலமான பிரச்சார நடவடிக்கை:

ஜமாஅத்தின் மிக முக்கியமான ஊடகமாக ‘உண்மை உதயம்’ என்ற இஸ்லாமிய மாத இதழ் திகழ்கின்றது. 1957ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இச் சஞ்சிகை இன்று தொடராக வெளியிடப்பட்டு வருகின்றது. இஸ்லாமிய கொள்கை, பண்பாடுகள், ஒழுக்க நெறிப் போதனைகள், பெண்கள், சிறார்கள், இளைஞர்களின் நல்வாழ்வுக்கான அழகிய வழிகாட்டல்கள், சமூகங்களுடனான சகவாழ்வு, சர்வதேச நிகழ்ச்சிகள், சமகால அம்சங்கள் என பலதையும் தாங்கி இது வெளிவருகின்றது. இதனை எமது ஊடக தளத்தினூடாகவும் பார்க்கலாம்.( www.jasm.lk)

துண்டுப் பிரசுரங்கள், புத்தகங்கள் என மற்றுமொரு பகுதியும் இதில் உள்ளடக்கப்படுகின்றது. ஏறத்தாள 50 நூற்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளது.

புனித அல்குர்ஆனினது தமிழ் மொழிபெயர்ப்பு ‘தர்ஜமதுல் குர்ஆன்’ இலங்கையில் முதன் முதலாக வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கள மொழி பேசும், வாசிக்கும் முஸ்லிம் சகோதரர்களதும், சிங்கள மொழியையே தமது தாய் மொழியாகக் கொண்ட பௌத்த சகோதரர்களதும் தேவைக்காக சிங்கள மொழி மூலமான தர்ஜமா வெளியிடப்படவுள்ளது. வெகு விரைவில் அதன் வெளியீடு இடம்பெறும். இன்ஷா அல்லாஹ்.

நவீன தொடர்பு சாதனங்களை முழுமையாகப் பயன்படுத்தி இத்துறையில் ஈடுபட முயற்சிக்கின்றோம். அல்லாஹுதஆலா அதற்கு அருள்புரிய வேண்டும்.

4) உங்களது அரபுக் கல்லூரி மாணவர்களின் விபரங்கள்

இஸ்லாத்தின் தூதை மக்கள் முன்வைக்கும் அறிவுப் பரம்பரையை உருவாக்கும் நோக்கில் கல்விக் கூடங்களை உருவாக்க வேண்டுமென்ற அடிப்படையில் 1983 ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி ஷதாருத் தவ்ஹீத் அஸ்ஸலஃபிய்யா| என்ற பெயரில் மார்க்கக் கல்விக் கூடமொன்றை ஆரம்பித்தோம். இதன் கிளைகளாக ஓட்டமாவடியில் ஷமர்கஸ் அந்நூர்| என்ற பெயரிலும் சம்மாந்துறையில் ஷமர்கஸ் தாருல் ஈமான்| என்ற பெயரிலும் கல்விக் கூடங்கள் இயங்கி வருகின்றன. மொத்தமாக மூன்று கல்வி நிறுவனங்களிலும் 350 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள். இதுவரை 287 பேர் பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர்.

இது தவிர, பெண்களுக்கான கல்விக் கூடமொன்றை ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு வருட காலமாக (ஒரு வருடகால) பகுதிநேரப் பாடநெறியொன்றினைப் பெண்களுக்காக நடாத்தி வருகின்றோம். இதில் 25 மாணவிகள் கல்வி கற்று வருகின்றார்கள்.

தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம் இலங்கை முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திலும், இலங்கை கல்வித் திணைக்களத்திலும் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெற்றுள்ளது. 1998ம் ஆண்டு மதீனா இஸ்லாமியப் பல்கலைக்கழகமும், ரியாத் இமாம் முஹம்மது இப்னு ஸுஊத் பல்கலைக்கழகமும் எமது பாடத்திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளன. குறுகிய காலத்தில் சர்வதேச உலகில் புகழ்பெற்ற இரு பல்கலைக்கழகங்கள்; கலாபீட பாடத்திட்டதிற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளமை எமது கலாபீட மாணவர்களுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும்.

உயர்கல்வித்துறையில் எமது கலாபீட மாணவர்கள் உள்நாட்டு, வெளிநாட்டுப் பல்கலைகழகங்களில், கல்விக் கல்லூரிகளில், சட்டக் கல்லூரியில் உயர் கல்வியைத் தொடர்கின்றனர்.

கலாபீடத்திலிருந்து கல்வி கற்று வெளியேறியவர்கள் பள்ளிவாசல்களில் இமாம்களாக, தாஈக்களாக, பல்கலைக்கழக விரிவுரையாளர்களாக, கல்விப் பணிப்பாளர்களாக, ஆசிரிய ஆலோசகர்களாக, ஆசிரியர்களாக மட்டுமன்றி மற்றும் பல துறைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர்.

கலாநிதிப் பட்டப்படிப்பை நிறைவு செய்த இருவர் பேராதனை, தென்கிழக்குப் பல்கலைக்கழக்ங்களில் அரபு, இஸ்லாமிய நாகரிகத் துறைத் தலைவர்களாக இருந்து வருகின்றனர். மற்றும் சிலர் பேராதனை, தென்கிழக்கு, கிழக்குப் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளாகளாகவும் பணிபுரிகின்றனர்.

வடமத்திய மாகாணத்தின் கல்வித் திணைக்களத்தில் தமிழ்ப் பிரிவு பணிப்பாளராக எமது கலாபீடத்தில் பட்டம் பெற்றவர் கடமை புரிவது இங்கு குறிப்பிடத்தக்கது. இத்தகைய வளர்ச்சிப்படிகளை ஈட்டிய எமது கலாபீடம் நாட்டுக்கும், சமூகத்திற்கும் பல பங்களிப்புக்களை ஆற்றிவருவது குறிப்பிடத்தக்கதாகும்.

5) எங்கிருந்து பணம் வருகின்றது?

இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக நல்லோர்களால் வழங்கப்படுகின்ற நிதி உதவிகள் எங்கிருந்து வந்தாலும் அதை அமானிதமாக ஏற்று நல்ல காரியங்களுக்காகச் செலவழித்து வருகின்றோம்.

எமது அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை இஸ்லாம் வலியுறுத்தியுள்ள கடமைகளுள் ஒன்றான ஸக்காத் சேகரிக்கப்பட்டு விநியோகிக்கும் நடைமுறை அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

ஜமாஅத் அங்கத்தவர்கள், ஆதரவாளர்களிடம் ஸதகாக்கள், நன்கொடைகள் சேகரிக்கப்படுகின்றன. இது தவிர வெளிநாட்டு தனிநபர்கள், நிறுவனங்கள் ஊடாக கிடைக்கப் பெறுகின்ற நிதிகளும் எமக்கு வந்து சேருகின்றன. அதனை எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா எமக்கு தஃவாவின் வளர்ச்சிக்கு வழங்கியுள்ள பேரருளாகவும் வளமாகவும் நாம் பயன்படுத்தி வருகின்றோம். எச்சந்தர்ப்பத்திலும் இதில் மோசடிகளோ, ஏமாற்றங்களோ, துஷ்பிரயோகங்களோ, வீண்விரயங்களோ நடக்கா வண்ணம் எம்மால் முடியுமான வரை பயன்படுத்தி வருகின்றோம்.

நிதி உதவிகள் என்பது சத்திய இஸ்லாத்தின் வளர்ச்சிக்குத் தடைகளை, தவறான திணிப்புக்களை ஏற்படுத்துமாயின் அது நிராகரிக்கப்பட வேண்டியதே என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

6) எந்த வகையில் செலவழிக்கப்படுகின்றது?

ஏற்கனவே குறிப்பிட்டிருப்பது போல் அமைப்பின் நோக்கத்தினையும் செயல்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்வதற்கே செலவழிக்கப்படுகின்றன.

வரவு, செலவு இரண்டுக்குமான விபரங்கள், ஒழுங்கமைக்கப்பட்ட கணக்கறிக்கைகள் எம்மிடம் தெளிவாகவே உள்ளன.

எச்சந்தர்ப்பத்திலும் தவறான வழிகளுக்கு, தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவியாக எதுவும் செலவழிக்கப்படுவதில்லை என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கின்றோம்.

7) எதிர்காலச் செயற்திட்டங்கள்

எமது அமைப்பின் நோக்கங்கள், செயற்திட்டஙகளில் குறிப்பிட்டது போல் அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் எல்லாக் காலங்களுக்கும் பொருத்தமான செயற்திட்டங்களாக அவை மிளிரும்.

8) பொதுச் சேவைகள் தொடர்பான தகவல்கள்

இது ஒரு விரிவான பகுதியாகும். எமது நோக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லாச் செயற்பாடுகளையும் முற்படுத்தியே பொதுச் சேவைகள் என்ற விடயம் முன்னெடுக்கப்படுகின்றது.

எமது அமைப்பு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றக் கூட்டிணைத்தல் சட்டமூலத்தின் கீழ் அங்கீகாரம் பெற்ற ஒரு சட்டரீதியான அமைப்பாகும்.

இச்சட்ட ஒழுங்குகளின் கீழ் நாம் செயல்பட அடையாளப்படுத்தியுள்ள பொதுச் சேவைகளை சட்ட ஒழுங்குக்கும் வரம்புக்கும் உட்பட்ட வகையில் செயல்படுத்தி வருகின்றோம்.

பள்ளிவாசல், குர்ஆன் பள்ளிக்கூடங்கள், இஸ்லாமிய நிலையங்கள் நிர்மாணித்தல், வீடமைப்புத் திட்டங்களை அமைத்தல், தந்தையை இழந்த அநாதைப் பிள்ளைகளுக்கு நிதி உதவி வழங்கல், பராமரித்தல், பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கல், குடிநீர் விநியோகத் திட்டங்களை மேற்கொள்ளல், அனர்த்தங்களின் போது உதவிகளை வழங்குதல், மருத்துவ முகாம்களை நடாத்துதல், கல்விக் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல் என்று அதன் தொடர்கள் நீண்டு செல்கின்றன.

இவற்றில் குறிப்பிட்ட சில விடயங்களைச் சிறிது விபரமாகச் சொல்லலாம் என்று நினைக்கின்றோம். வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்து மீண்டும் மீள்குடியேறிய மக்களுக்காக மீள்குடியேற்றக் கிராமமொன்றைத் தற்போது செயல்படுத்தி வருகின்றோம். 1500 அநாதைப் பிள்ளைகளுக்கு மாதாந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் சகல துறை சார்ந்த 50 மாணவர்களுக்கு மாதாந்த நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன. அண்மையில் இறுதியாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லிம் சகோதரர்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளமை போன்றன குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவைகளாகும்.

9) ஏனைய இன மக்களுடனான தொடர்புகள்

மனிதர்கள் அனைவரும் இறைவனின் படைப்புக்கள். அன்பு, இரக்கம், உதவி, ஒத்தாசையோடு அவர்களுடன் வாழ வேண்டும் என்பது இஸ்லாத்தின் கண்டிப்பான கட்டளை. இதையே நாம் செய்து வருகின்றோம். அனர்த்தங்கள், ஆபத்துக்களின் போது அவர்களை அரவணைக்கும் வண்ணம் அவர்களுக்கான மனிதாபிமான உதவிகளில் ஈடுபட்டு வந்தோம். வருகின்றோம்.

சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வு பற்றி இன்று அதிகம் பேசப்படுகின்றது. இது அறிந்து கொள்ளப்படாமையும் புரிந்து கொள்ளப்படாமையுமே ஒருவர் மற்றவரைச் சந்தேகிக்கும் இன்றைய நிலைக்குக் காரணம். இதைப் புரியவைக்கும் பணியில் எமது பிரச்சார சாதனங்களினூடாக முடிந்தவரை நாம் ஈடுபட்டு வருகின்றோம் – அல்ஹம்து லில்லாஹ்.

10) தீவிரவாதத்தோடு தொடர்புகள் உண்டா?

இல்லை. மனித ஆத்மாக்களை மதிக்கச் சொல்லும் மார்க்கத்தைப் பின்பற்றும் நாம், பிற மனிதர்களுக்கு மனிதாமிமான உதவிகளைச் செய்துவரும் நாம் ஒருபோதும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட மாட்டோம். இதய சுத்தியோடும் தெளிந்த சிந்தனையோடும் எமது பிரச்சார நடவடிக்கைகளை அவதானிக்கும் எவரும் இந்த உண்மையைப் புரிந்து கொள்ளலாம்.

11) பொதுபல சேனாவின் குற்றச்சாட்டை மறுக்கின்றீர்களா?

ஆம்! முற்றாக மறுக்கின்றோம். ஆதாரமில்லாமல் பொய்களையும் வதந்திகளையும் அப்பாவிப் பொதுமக்களிடம் அள்ளி வீசுவதால் பௌத்த தர்மத்திற்குத்தான் இழிவே தவிர எமக்கல்ல.

12) பெரும்பான்மை மக்கள் தொடர்பாக உங்கள் கருத்துக்கள்

இந்நாட்டில் வாழும் பெரும்பான்மைச் சமூகமான பௌத்த மதத்தைச் சேர்ந்த சகோதரர்களில் அதிகமானோர் மிகவும் நல்லவர்கள். இந்நாட்டின் இறைமையைக் காக்கும் வண்ணம் நாட்டுப்பற்றோடு தேசிய பங்களிப்புக்களைச் செய்த, செய்து வருகின்ற எமக்கு இன்று ஏற்படுத்தப்பட்டிருக்கும் அசாதாரண நிலை குறித்து அவர்கள் வருந்துவது எமக்கு விளங்குகின்றது. எம்மைக் குறித்தும் எமது மார்க்கம் குறித்தும் அவர்களில் பல்துறை சார்ந்த பொறுப்புணர்ச்சி மிக்கவர்கள் ஊடகங்களில் பேசும், எழுதும் விடயங்கள் எமது மனங்களைக் குளிர வைக்கின்றன. இனவாதத் தீ மூட்டப்பட்டும் எமது நிலை குறித்து வருந்தும் ஈரமுள்ள இதயங்கள் அவர்களில் இருப்பது எமக்கு இதமாக உள்ளது. இதைப் பெரும்பான்மை மக்கள் பேணிப் பாதுகாக்க வேண்டுகின்றோம்.

13) முஸ்லிம்கள் இச்சந்தர்ப்பத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?

இஸ்லாம் குறித்த அவதூறுகளும், அவமதிப்புகளும் எதிரிகளினால் புதிதாக ஏற்படுத்தப்பட்டவை அல்ல. மாறாக, இஸ்லாமிய பிரச்சாரம் முன்வைக்கப்பட்ட ஆரம்ப காலத்திலிருந்தே இது தொடங்கிவிட்டது. மறுமைநாள் வரைக்கும் இது தொடரும். எனவே, முஸ்லிம்கள் உணர்ச்சிகளுக்கும், கொந்தளிப்புகளுக்கும் அடிமையாகி செயற்பட்டு விடக்கூடாது. நபி(ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் நடந்துகொண்ட அணுகுமுறையினை அறிந்து நடக்க வேண்டும். தலைமைத்துவக் கட்டுப்பாடு இதில் மிக முக்கியமானது. சிறந்த பண்பாடுகளையும், நல்ல நடத்தைகளையும் தமது வாழ்வில் பிரதிபலிக்கச் செய்ய வேண்டும். முன்மாதிரி முஸ்லிம்களுக்குரிய மொத்தப் பண்பாடுகளையும் கொண்டு வாழ்ந்தால் நமக்கு நல்வாழ்வு உண்டு.

மார்க்கம், அரசியல் என எல்லா விதத்திலும் பல்வேறு குழுக்களாகப் பிளவுபட்டிருக்கும் எம்மை இந்நிலை ஒன்றுபடச் சொல்கிறது. சந்தர்ப்பமாக இதைப் பயன்படுத்தி நாம் ஒன்றுபட வில்லையென்றால் எமது ஈமானில் பலவீனம் இருக்கிறது என்பதே அர்த்தம். அத்தோடு எமக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். அவற்றை எமக்குள் நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும். விட்டு விட்டு இஸ்லாத்தை அழிக்கத் துடிக்கும் இனவாதிகளிடம் எம்மை நாமே காட்டிக் கொடுக்கும் இழிந்த செயல்களைச் செய்து இஸ்லாத்திற்கு நாம் இழிவை ஏற்படுத்திவிடக் கூடாது.

நாம் சிறுபான்மையிராக இருந்தும் எமக்கு வழங்கப்பட்டிருக்கும் மத சுதந்திரம் குறித்து சிந்திக்க வேண்டும். இதற்கு தடை வரும் வண்ணமாக நாம் நடந்துகொள்ளக் கூடாது.

14) ஏனைய விடயங்கள் குறித்து

கடந்த மூன்று தசாப்தங்களாக இந்நாட்டைச் சூழ்ந்திருந்த ஆயுதப் பயங்கரவாதம் இன்று முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தால் நாடு இழந்தது உயிர்கள் மட்டுமன்று. பொருளாதாரம், நிம்மதி, சந்தோசம், கல்வி, கலாசாரம் எல்லாவற்றையும்தான். இதிலிருந்து மீண்டு மெதுவாக முன்னேறிவரும் எமது நாட்டில் ‘இனவாதம்’ என்ற பயங்கரவாதத்தின் மூலம் அழிவு வந்திட அனுமதித்துவிடக்கூடாது. மதத்தலைவர்களும், அரசியல்வாதிகளும், புத்திஜீவிகளும், அதிகாரம் படைத்தவர்களும் ஒன்றாக இணைந்து இப்பணியில் இதய சுத்தியோடு செயற்பட வேண்டும். அப்போதுதான் எமது நாடு வளம்மிக்க, ஆச்சரியமிக்க நாடாக மாறும்.

இன்று ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து அகில இலங்கை ஜம்இயதுல் உலமா (ACJU), இலங்கை முஸ்லிம் அமைப்புக்கள் கூட்டமைப்பு (MCSL) ஆகியன ஏனைய அமைப்புக்களுடன் கலந்தாலோசனை செய்து சாத்தியமான வழிமுறைகளை முன்னெடுத்துச் செல்கின்றன.

இதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். சகல பிரச்சினைகளும் சுமுகமாகத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஒவ்வொருவரும் பின்பற்றுவதோடு, எல்லாம் வல்ல அல்லாஹுதஆலாவிடத்தில் பிரார்த்தனை செய்தல் வேண்டும்.

இறுதியாக, இஸ்லாத்தின் ஊற்றுக் கண்களான அல்குர்ஆனையும், அஸ்ஸுன்னாவையும் இறுகப் பற்றிப் பிடித்து, சகல பிரச்சினைகளுக்கும் தீர்வை அதிலிருந்தே தேடி சாந்தி, சமாதானமாக வாழ முயற்சிப்போம்.